"மஞ்சள் மலிந்திருக்க மரணம் தணிந்திருக்கும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி பேச்சு

"மஞ்சள் மலிந்திருக்க மரணம் தணிந்திருக்கும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி பேச்சு
Published on
Updated on
1 min read

உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை வளாகத்தில் பிளாஸ்டிக் இல்லா வளாகமாக அறிவித்து மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரங்களை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி மகாதேவன் துவங்கி வைத்தார். இந்த விழாவில் சுற்றுசூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை ஆகியவற்றின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்பிரியா சாகு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி, ஜி.ஆர்.சுவாமிநாதன், பவானி சுப்பராயன், விஜயகுமார், சத்யநாராயண பிரசாத், தமிழ்நாடு சுற்றுச்சூழல் வாரியத்தின் தலைவர் ஜெயந்தி முரளி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், தமிழக அரசின் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் வீராகதிரவன், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நிர்வாக நீதிபதி மகாதேவன், மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, மஞ்சள் பையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், மீண்டும் மஞ்சள்பைத் திட்டத்தை தமிழக அரசு துவங்கியுள்ளது. நெகிழிகளை தடை செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மஞ்சள் பைத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நெகிழிப் பொருட்கள் சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்துகிறது என கூறினார். 

மேலும்,இவ்விடத்தில் பழைய பழமொழி ஒன்றை நினைவு கூற விரும்புவதாக தெரிவித்த அவர், "மஞ்சள் மலிந்திருக்க மரணம் தணிந்திருக்கும்" என்றார். அன்றாட வாழ்வில் நாம் மஞ்சளை பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லதோ அதேபோன்று மஞ்சள் பையை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நன்மையை பயக்கும். மஞ்சள் பை திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் திருமணங்களில் மஞ்சப்பை வழங்குவது வழக்கம்; பழமையான மஞ்சள் பையை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com