குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்...

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவை இல்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  தெரிவித்துள்ளார்.

குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்...

தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.இந்த நிலையில் சட்டப்பேரவையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 வழங்கும் திட்டம் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டத்தின் நோக்கம் இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்குவதே ஆகும் என உறுதியளிக்கிறேன். எனவே இதற்காக குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை. குடும்பத்தலைவிகளுக்கான நிதியுதவி திட்டத்தை செயல்படுத்துவற்கான வழிமுறைகள் தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன. குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே உரிமைத் திட்டம் என்பது தவறான தகவல். குடும்பத் தலைவியாக இருந்தால் மட்டுமே உரிமைத் தொகை என்று தவறாக கருதி ரேசன் அட்டைகளில் குடும்பத் தலைவர்களை மாற்றுகின்றனர்.

இந்த நிதியுதவி திட்டத்தை பெற ரேசன் கார்டுகளில் குடும்பத் தலைவர்களை மாற்ற வேண்டியது இல்லை. இந்த திட்டம் மிகவும் ஏழ்மையானவர்களுக்கானதாகும்.குடும்பத்தலைவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பணக்காரர்களுக்கும், சம்பளம் வாங்குபவர்களுக்கும் வழங்க கூடாது என விமர்சனங்கள் எழுந்தன. ஆகவே ஏழை பெண்களுக்கு உரிமைத் தொகை சென்றடைவதை உறுதி செய்ய தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.