தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்வதற்காக டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் 50 பேர் கொண்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மூதாட்டி ஒருவர் நடந்து வந்தார். அவர் அணிந்திருந்த செருப்பு திடீரென அறுந்ததால் மூதாட்டி சாலையில் நிலைதடுமாறினார். இதை அங்கு பணிகளை கண்காணித்துக் கொண்டிருந்த டிஎஸ்பி ராமமூர்த்தி, பார்த்துவிட்டு சற்றும் தயங்கமால் மூதாட்டியின் செருப்பை கழற்றி அதைச் சரிசெய்து மீண்டும் அவரது கையாலேயே மாட்டிவிட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்திருக்கிறது.
மேலும் இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியதோடு மட்டுமில்லாமல், அவரின் மனித நேயம் மிக்க செயல் பலரின் பாராட்டையும் குவித்து வருகிறது.