ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்ற நடவடிக்கை... தொடரும் சர்ச்சை...?

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா ? தொடரும் சர்ச்சையின் பின்னணி என்ன?

ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்ற நடவடிக்கை... தொடரும் சர்ச்சை...?

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா ? தொடரும் சர்ச்சையின் பின்னணி என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

* 2001-2006ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழகத்துக்குப் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட முடிவு செய்தது. அப்போது, ராணி மேரி கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றி அங்கு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கல்லூரியை மாற்றும் முடிவு கைவிடப்பட்டது.

* பின்னர், கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான இடத்தை வாங்கி அங்கு தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அந்த இடத்தில் பூமி பூஜை போடப்பட்டது. 

* 2006ம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இடம் மீண்டும் கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

* புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் நீண்டகாலமாகச் செயல்பட்டுவரும் நிலையில்,  இடவசதி போதவில்லை என்ற காரணத்திற்கான 2006-2011ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டமன்றக் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

*  அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் கனவுத் திட்டமாக, ரூ.629 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டடம் அமைக்கப்பட்டது.

* 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றார்.

* பின்னர் பழைய தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்துத் துறைகளும் மெல்ல மெல்ல புதிய சட்டமன்ற மாளிகைக்கு மாற்றப்பட்டன. 

* 2010ம் ஆண்டு புதிய சட்டமன்றத்தில் கடைசி நிதிநிலை கூட்டுத்தொடர் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடர் பழைய சட்டமன்றத்தில் நடைபெறும் என்று கூறி உரையை முடித்தார். அதற்கு பதிலளித்த அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தேர்தல் முடிவடைந்து அடுத்த கூட்டத்தொடர் இந்தப் புதிய சட்டமன்றத்தில்தான் நடைபெறும் என்று பதிலளித்தார்.

* 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்து, அதிமுக ஆட்சி அமைத்தது.

* ஆட்சி அமைத்த பின், 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி புதிய சட்டமன்ற கட்டிடத்தை பன்நோக்கு அரசு மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்து  அமைச்சரவை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

* மேலும் தலைமைச் செயலகமாக திறக்கப்பட்டபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதி, சோனியா காந்தி பெயர்கள் பொரித்து, வைக்கப்பட்ட கல்வெட்டும் அகற்றப்பட்டது

* அதன் பின், தலைமைச் செயலக கட்டிடம், பன்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா புதிய மருத்துவமனையை திறந்து வைத்ததற்காக கல்வெட்டு அங்கே பொரித்து வைக்கப்பட்டது.

* தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக மருத்துவமனை முழுவதுமாக தரம் உயர்த்தப்பட்டது..கொரோனா பெருந்தொற்று தொடங்கியவுடன், கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மாற்றப்பட்டது.

* அண்மையில் நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

* இந்த நிலையில்தான், தற்போது ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில், கருணாநிதி, மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்ற புதிய சட்டமன்ற வளாகம் திறப்புவிழா கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டிருக்கிறது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

* புதிய தலைமைச் செயலகம் என்ற பெயர் அந்த கல்வெட்டில் இருப்பதால், மருத்துவமனை கட்டிடம் மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன..

* சென்னை கிண்டியிலுள்ள கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் அரசு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்து பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில், அந்த மருத்துவமனை தயாராகிவிட்டால், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை செயல்படும் கட்டடத்துக்கு சட்டமன்றம் மாற்றப்படலாம் என்கிற ஒரு பேச்சும் எழுந்துள்ளது.

* சட்டப்பேரவையிலும் திமுக கூட்டணி கட்சிகள், ஓமந்தூரார் தோட்டத்தில் சட்டப்பேரவையை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்..அதேப்போல், தலைமை செயலகம் சங்கம் சார்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

* தமிழக அரசின் சார்பில் இதுக்குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கப்படாத நிலையில், அரசின் திட்டம் என்ன என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்..