திமுக இளைஞரணியினர் போர்க்களத்திற்கு தயாராகுங்கள்-திருச்சி சிவா!

இந்த இனத்தை, இயக்கத்தை அழிக்க எதிரிகள் எந்த வழியில் வந்தாலும் அதனை சந்திக்க நம்மை நாம் தயார்படுத்தி  வலிமை கொண்டவர்களாக மாற வேண்டும்.

திமுக இளைஞரணியினர் போர்க்களத்திற்கு தயாராகுங்கள்-திருச்சி சிவா!

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கலில் மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமையில் இளைஞரணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. 

அரசியல்வாதிகள் அல்ல லட்சியவாதிகள்

இக்கூட்டத்தில் பங்கேற்ற முனைவர் சபாபதி மோகன் மாநில சுயாட்சி என்ற தலைப்பில் பேசியதையடுத்து, திராவிட இயக்க வரலாறு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கருத்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

இப்பாசறை கூட்டத்தின் மூலமாக உங்களை அரசியல்வாதிகளாக மாற்றுவது எங்கள் நோக்கமல்ல. லட்சியவாதிகளாக உருவாக்க வேண்டும் என்ற கடமை உணர்வுடன் செயல்பட்டு வருகிறோம். 

போர்க்களத்திற்கு தயாராகுங்கள்

ஒரு பொது இடத்தில் நடைபெறும் வாதத்தில் ஆற்றல் தன்மையுடன் பேசி வெற்றி பெறுபவன் திமுக தொண்டன். ஆளுங்கட்சியாக இருந்தாலும் உரிமைக்காக நாங்கள் போராடுவோம். இளைஞர் அணியினர் போர்க்களத்திற்கு தயாராகுங்கள். அதன் மூலமாக அடக்குமுறை ஏவப்படலாம். பல்வேறு இன்னல்களை சந்தித்தாலும், அதனைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இளைஞர்களுக்கு வேண்டும்.

இன்றைய தினம் திராவிட மாடல் தத்துவ முறையில் ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் பயிற்சி பெற்றவர் தான். தமிழன் வாழும் வரை, தமிழ் மொழி இருக்கும் வரை, திமுக என்ற ஒரு இயக்கம் இருந்தாக வேண்டும். 

எதிரிகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்

இந்த இனத்தை, இயக்கத்தை அழிக்க எதிரிகள் எந்த வழியில் வந்தாலும் அதனை சந்திக்க நம்மை நாம் தயார்படுத்தி  வலிமை கொண்டவர்களாக மாற வேண்டும். இந்த பாசறை பயிற்சி கூட்டத்தின் தொடர்ச்சியாக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழக அளவில் மாநாடு நடத்தப்படும் போது ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் என்றார்.

அதனைத் தொடர்ந்து திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களான அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி என்று அனைவரும் உறுதிமொழி எடுத்து முழக்கம்மிட்டனர்.