சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை தான் வேண்டும்... அடம்பிடிக்கும் பாலியல் சாமியார் சிவசங்கர் பாபா!

சிறையில் கூடுதல் வசதி கொண்ட முதல் வகுப்பு அறையை வழங்கக் கோரிய சிவசங்கர் பாபாவின் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை தான் வேண்டும்... அடம்பிடிக்கும் பாலியல் சாமியார் சிவசங்கர் பாபா!

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி மாணவிகள் அளித்த புகாரின்பேரில் இதுவரை மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், இரண்டு வழக்குகளில் சிறை தண்டனையைப் பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களைத் திரட்டுவதற்காக அப்பள்ளி ஆசிரியைகள், பணியாளர்கள் என அனைவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி சிவசங்கர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

சமீபத்தில் சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறை திரும்பினார். இந்த நிலையில், சிவசங்கர் பாபாவுக்குச் சிறையில் கூடுதல் வசதிகள் கொண்ட முதல் வகுப்பு அறையை ஒதுக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த போக்சோ நீதிமன்றத்தின் நீதிபதி தமிழரசி, அம்மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.