அதிமுக பிரச்சினையில் தலையிடக்கூடாது....சொத்துக்களை முடக்கி எச்சரிக்கை!

அதிமுக பிரச்சினையில் தலையிடக்கூடாது....சொத்துக்களை முடக்கி எச்சரிக்கை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு எப்போது வேண்டுமானாலும் சசிகலா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்னும் சூழல் நிலவுகையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி எனத் தீர்ப்பு வந்தது. சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார் சசிகலா. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டு எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றுசேர்ந்தனர். தற்போது இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் சசிகலா தலையிடக்கூடாது என பாஜக தலைமை விரும்புகிறது. எனவே அவருக்கு எதிராக வருமானவரித் துறையை களமிறக்கியுள்ளது.

சென்னை தியாகராய நகர், பத்மநாபா தெருவில், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகலா நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியதை அடுத்து, பினாமி பெயரில் இயங்கும் சசிகலாவுக்குச் சொந்தமான 15  கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தினை, வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சசிகலா தலையீடு இருக்குமா என்ற குழப்பங்களுக்கு நடுவே, அவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது பரபரப்பைக் கூட்டியுள்ளது.