தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கிய நிலையில், தடுப்பூசியை போட்டுக் கொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் விதமாக, மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 முதல் 44 வயதுடைய நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இதை அடுத்து, தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகவும், அதற்கான முன் பதிவு செய்து கொள்வதற்காகவும் ஏராளமான இளைஞர்கள் வரிசை கட்டி நின்றனர்.
இதேபோன்று, விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் முகாமில், சிவகாசி சுற்றுவாட்டரப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆரவமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே ராஜபதி கிராமத்தில் கொரோனா தடுப்பு செலுத்தும் முகாமினை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதாஜீவன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில், மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், டோக்கன் வழங்கப்பட்டு, வரிசையாக தடுப்பூசி போடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் பனங்காடி சாலையில் நடத்தப்பட்ட தடுப்பூசி செலுத்தும் முகாமில், ஏராளமான தவழும் மாற்றுதிறனாளிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.