ஆன்லைன் மோசடியில் சிக்கி ரூ 13 லட்சத்தை இழந்த வாலிபர்!

ஆன்லைன் மோசடியில் சிக்கி ரூ 13 லட்சத்தை இழந்த வாலிபர்!

கோயம்பத்தூர்: ஆன்லைன் வேலை வாங்கி தருவதாக கூறியவரிடம் 13 லட்சத்தை இழந்துள்ளார் கோயம்புத்தூரை சேர்ந்த நபர்.

கோயம்பத்தூர், உப்பிலிபாளையத்தை சேர்ந்த டொமினிக் சேவியோ என்னும் வாலிபர், தனது தொலைபேசியில் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து, வாட்ஸாப் மூலம் ஒரு குறுஞ்செய்தி பெற்றார். அதில், ஆன்லைன் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக குறிப்பிட்டிருந்தது.

இந்த குறுஞ்செய்தியை நம்பிய டொமினிக், அடையாளம் தெரியாத அந்நபரை தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். முதலில், ஒரு சில சிறிய பணிகளை ஆன்லைன் மூலம் முடிக்குமாறு கூறியுள்ளார். 

அதன் பின்னர், அதிக வருவாய் ஈட்ட வேண்டுமெனில், முதலீடு செய்ய வேண்டுமென, அந்நபர் டொமினிக்கிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறியபடியே, ரூ 12.98 லட்சத்தை பல தவணைகளில் செலுத்தி வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில், அந்நபர் மீது டொமினிக்குக்கு சந்தேகம் வரவே, அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். பின்னர் சைபர் க்ரைம் போலீசாரிடம் அந்நபர் மீது புகார் அளித்தார். டொமினிக்கின் புகாரை பெற்றுக்கொண்டு, சைபர் க்ரைம் போலீசார், மோசடி செய்த நபர் மீது பிரிவு 420 மற்றும் 66Dன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.