பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை- சிசிடிவி காட்சி வைரல்

சென்னையில் பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை- சிசிடிவி காட்சி வைரல்

சென்னை அமைந்தகரை லக்‌ஷ்மி டாக்கீஸ் சாலையில் சிறிய அளவிலான ஒரு கடையை நடத்தி வருபவர் லக்‌ஷ்மண். இவர் நேற்று வெளியூருக்குச் சென்ற நிலையில், கடையின் பணியாளரான செல்வம்  நேற்றிரவு 10 மணிக்கு கடையை  பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர் இன்று காலை 11 மணியளவில் கடையை திறக்க வந்த பணியாளர் செல்வம், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையினுள் இருந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள், கல்லாப் பெட்டியில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை காணாமல் போயிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து கடையின் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து திருடியிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அமைந்தகரை காவல் நிலையத்திற்கு செல்வம் புகார் அளித்தார், புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பையுடன் சுற்றித் திரிந்த நபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அந்த நபர் முன்னுக்குப் பின் முரனாக பதிலளிக்கவே அவனது பையை சோதனையிட்டனர்.

அப்போது பையில் ஏராளமான சிகரெட் பாக்கெட்டுகள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (23) என்பதும் அவன் மீது ஏற்கனவே கோயம்பேடு மற்றும் மெரினா காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. 

மேலும் வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் அமைந்தகரையில் கடையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதும் வெளிவந்தது. இதனையடுத்து அமைந்தகரை போலீசாருக்கு தகவலளித்து குற்றவாளியான பார்த்திபனை வடக்கு கடற்கரை போலீசார் ஒப்படைத்தனர்.

பின்னர் சி.சி.டி.வி காட்சிகளில் வந்த மர்ம நபரும், பிடிபட்ட நபரும் ஒரே ஆள்தான் என்பதை உறுதி செய்த அமைந்தகரை போலீசார் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.