தனது 18 வயதில் பில் கேட்ஸ் தயாரித்த ரெஸ்யூம்..! இணையத்தில் வைரல்..!

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் 48 ஆண்டுகளுக்கு முந்தைய தனது ரெஸ்யூமை இணையத்தில் பகிர அது தற்போது வைரலாகி வருகின்றது.

தனது 18 வயதில் பில் கேட்ஸ் தயாரித்த ரெஸ்யூம்..! இணையத்தில் வைரல்..!

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ரெஸ்யூம் என்பது மிக முக்கியமானது. தங்களது முதல் ரெஸ்யூமை தயாரிக்க, பட்ட கஷ்டமும், குழப்பமும் நினைவிருக்கலாம். ரெஸ்யூம் என்பது ஒருவரின் தகுதிகள், அனுபவம் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகின்றது. ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க விண்ணப்பிப்பவருக்கும், தங்களது நிறுவனத்திற்கு திறமையானவரை தேர்ந்தெடுக்க ஒரு நிறுவனத்திற்கும் இந்த ரெஸ்யூம் மிக முக்கிய கருவியாக உள்ளது.  ஒரு ரெஸ்யூமை பார்த்தவுடனே அந்த நபருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை அந்த ரெஸ்யூம் உருவாக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தொழில்நுட்பத் துறையில் பில்லியனராவதற்கு முன்பு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக 1974 இல், அதாவது  48 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தயாரித்த ரெஸ்யூமை சமூக வலைத்தளங்களில் ஒன்றான Linkedin இல் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அந்த ரெஸ்யூம் மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. 66 வயதான பில்கேட்ஸ் தனது 18 ஆவது வயதில் இந்த ரெஸ்யூமை வடிவமைத்துள்ளார். அந்த ரெஸ்யூம் மிகச் சிறந்ததாகாக் கருதப்பட்டு பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அந்த ரெஸ்யூமில் அவரது பெயர் வில்லியம் எச் கேட்ஸ் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர் இந்த ரெஸ்யூமை ஹார்வர்ட் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போது உருவாக்கப்பட்டதாக அதில் அவர் தெரிவித்துளார். மேலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைப்பு, டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட், கம்பைலர் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற படிப்புகளை படித்ததாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில கணினி மொழிகளைக் குறிப்பிட்டு அதில் தனக்கு சிறந்த அனுபவம் உண்டு என்றும், 1973 இல் TRW சிஸ்டம்ஸ் குழுமத்தில் கணினி புரோகிராமராக இருந்த அனுபவத்தையும் குறிப்பிட்டு உள்ளார். அதேபோல் 1972ஆம் ஆண்டு சியாட்டிலில் உள்ள லேக்சைட் பள்ளியில் இணைத் தலைவர் மற்றும் இணை பங்குதாரராக இருந்த தனது பணியையும் பகிர்ந்து 12 ஆயிரம் டாலர் ஊதியம் கேட்டு அந்த ரெஸ்யூமை தயாரித்து உள்ளார்.

அவருடைய ரெஸ்யூம் இணையத்தில் வேகமாக பகிரப்பட, அது தற்போது வைரலாகி வருகின்றது. பலரும் இந்த ரெஸ்யூமை பகிர்ந்ததற்கு நன்றி என்றும், ஒரு அருமையான ரெஸ்யூமை பார்க்கும் அனுபவம் கிடைத்ததாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர், நாம் வாழ்க்கையில் எவ்வளவோ சாதித்து இருந்தாலும், நமது பழைய ரெஸ்யூமை பார்க்கும் மலரும் நினைவுகளால் கிடைக்கும் இனிமையான அனுபவமே தனி தான் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.