திடீரென பாதியாக உடைந்த நீர்ச்சறுக்கு..! விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் நிலை என்ன?

பொழுதுபோக்கு பூங்காவில் திடீரென நீர்ச்சறுக்கு பாதியாக உடைந்ததால் குழந்தைகள் சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழும் திகிலூட்டும் வீடியோ வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

திடீரென பாதியாக உடைந்த நீர்ச்சறுக்கு..! விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் நிலை என்ன?

இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவாவின் சுரபயா நகரில்  கெஞ்சரன் என்ற பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. அங்கு குழந்தைகளும், பயணிகளும் நீர்ச்சறுக்கில் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்களை தொடர்ந்து இன்னும் சில பயணிகள் அடுத்த சுற்றுக்காக காத்திருந்தனர்.

அப்போது திடீரென நீர்ச்சறுக்கு பாதியாக உடைந்து கீழே சரிந்தது. உடைந்த வேகத்தில் சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து குழந்தைகள் கீழே விழ தொடங்கியதால், அருகில் இருந்தவர்கள் அலறியவாறே கூச்சலிட்டு ஓடினர். இந்த விபத்தில் 16 குழந்தைகள் படுகாயம் அடைந்ததோடு, 8 பேருக்கு மேல் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. இது குறித்த திகிலூட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இதனிடையே இந்த விபத்து தொடர்பாக பேசிய பூங்கா நிர்வாகிகள், பயணிகளின் பாரம் தாங்காமல் நீர் சறுக்கு உடைந்து இருக்கக் கூடும் என கூறியுள்ளனர். மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்கான செலவை பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் வழங்கும் என்றும் கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் இந்த பொழுதுபோக்கு பூங்காவை மூடிவிட்டு, விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள மற்ற பூங்காக்களையும் உடனடியாக ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும் இணையத்தில் வெளியாகும் இந்த திகிலூட்டும் வீடியோ பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.