சூழ்நிலையை தனதாக்கி, ஹீரோவாக மாறிய புதுமாப்பிள்ளை!

சூழ்நிலையை தனதாக்கி, ஹீரோவாக மாறிய புதுமாப்பிள்ளை!

கன்னியாகுமரி:  நாகர்கோயிலில் நடந்த திருமணம் ஒன்றில் மணமக்கள் வீட்டார் மோதலில் ஈடுபட்டனர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மறவன்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு கல்யாண மண்டபத்தில்,  ஒரு கோலாகல திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த மணமகனுக்கும், ராஜாமங்கலம்துறை பகுதியை சேர்ந்த மணமகளுக்கும் நேற்று திருமணம் நடந்துள்ளது. 

இதற்கான விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்துகொண்டிருக்கும் வேளையில், மணமகளின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மது போதையில் குத்தாட்டம் போட்டுள்ளனர். அப்பொழுது, நிலை தெரியாமல் ஆட்டம் போட்டதில், மணமகனின் உறவுக்கார பெண்கள் மீது உரசியுள்ளனர். இதில், ஆத்திரம் அடைந்த மணமகன் வீட்டார், மணமகளின் உறவுக்கார வாலிபர்களை அப்புறப்படுத்த முயற்சித்துள்ளனர். 

குதூகலத்தில் ஆடிக்கொண்டிருந்த வேளையில், தொந்தரவு செய்வதாக எண்ணி, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில், மணமகள் வீட்டாருக்கும், மணமகன் வீட்டாருக்கும் சிறிய போராக மாறியது. மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், நாற்காலிகளை பறக்கவிட்டும் உடைத்தெறிந்துள்ளனர்.

இதற்கிடையில், மணப்பெண் நடக்கும் சம்பவங்களை கண்டு மயங்கியுள்ளார். பின்னர் மணமகன் யார் உதவியுமின்றி, மணமகளை தோலில் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டார். தற்போது அக்காட்சிகள் இணையத்தில் வைரலாகி, காண்பவர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில், கோட்டார் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.