மலேசிய முன்னாள் பிரதமருக்கு சிறை தண்டனை!

மலேசிய முன்னாள் பிரதமருக்கு சிறை தண்டனை!

இந்தத் தீர்ப்பின்படி நஜிப் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும், சிறையில் அடைக்கப்பட்ட முதல் முன்னாள் பிரதமர் என்ற நிலையை நஜிப் அனுபவிக்க வேண்டும்.

நிதி மோசடி

1எம்.டி.பி என்பது மலேசிய நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் ஆகும். 1எம்.டி.பி நிறுவனத்தின் முன்னாள் பிரிவான எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து 42 மில்லியன் ரிங்கிட்டை (10.1 மில்லியன் டாலர்) தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். இதனால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பணமோசடி மற்றும் நம்பிக்கை மீறல் ஆகியவற்றில் நஜிப் ரசாக் குற்றவாளி என்று ஜூலை 2020 ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் கண்டறிந்தது.

 ஊழல் குற்றச்சாட்டு

1 எம்.டி. பி நிதியில் ஊழல் செய்ததற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் தண்டனை மற்றும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மலேசிய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு நஜிப் பிரதமராக இருந்தபோது நிறுவப்பட்ட 1 எம்.டி.பி அரச நிதியிலிருந்து சுமார் 4.5 பில்லியன் டாலர்கள் திருடப்பட்டதாக வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.

சிறை செல்கிறார் நஜீப்

நஜீப் இன்று சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என கூறப்படுகிறது. தண்டனை பெற்று சிறை செல்லும் மலேசியாவின் முதல் முன்னாள் பிரதமர் இவர். முன்னாள் பிரதமர் நஜீப் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஜாமீனில் உள்ளார், அவரது மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.

நஜிப் சார்ந்திருக்கும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் தலையீடு நீதித்துறை செயல்பாட்டில் இருக்கும் என்ற அச்சத்தையும் இந்தத் தீர்ப்பு நீக்குவதாக கூறப்படுகிறது.

கடந்த டிசம்பரில் ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது. இறுதி வாய்ப்பாக உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும்படி அவருக்கு கூறப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அவருக்கான தண்டனையை உறுதி செய்து இன்று தீர்ப்பு வழங்கியது.