விண்வெளி வீரர்களுடன் சீன அதிபர் நேரடியாக உரையாடினார்

சீனாவால் கட்டமைக்கப்பட்டு வரும் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள வீரர்களுடன், அந்நாட்டு அதிபர் நேரடியாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

விண்வெளி வீரர்களுடன் சீன அதிபர் நேரடியாக உரையாடினார்
விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தியாங்காங் ஹெவன்லி பேலஸ் என்ற பெயரில் விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை கட்டமைத்து வருகிறது. இந்த விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய  நீ ஹைசெங், லியு போமிங், டாங் ஹோங்போ ஆகிய 3 வீரர்களை கடந்த 17 ஆம் தேதி அனுப்பி வைத்தது.
 
இந்த நிலையில் கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சீன வீரர்களுடன் அதிபர் ஜி ஜின் பிங் நேற்று உரையாடினார். பீஜிங்கில் உள்ள விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சுமார் 5 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த உரையாடல் சீன அரசு தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.
 
இந்த 3 விண்வெளி வீரர்களும் அடுத்த 3 மாதங்களில விண்வெளி நிலையத்தை கட்டி முடிப்பார்கள் எனவும் இது அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு போட்டியாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.