இலங்கையில் மேலும் 8 அமைச்சர்கள் பதவி ஏற்பு.. அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார் அதிபர்

இலங்கையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவையில் மேலும் 8 பேர் புதிதாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

இலங்கையில் மேலும் 8 அமைச்சர்கள் பதவி ஏற்பு.. அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார் அதிபர்

கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர்.

இருப்பினும் சற்றும் அசராத அதிபர் கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்க-ஐ புதிய பிரதமராக நியமித்து, நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அமைச்சரவை மாற்றி அமைத்து வருகிறார். அந்தவகையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 9 அமைச்சர்கள் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில், இன்று மேலும் 8 பேருடன் அமைச்சரவையை அதிபர் கோத்தபய ராஜபக்சே விரிவாக்கம் செய்துள்ளார்.

இதில் மீன்வளத்துறை அமைச்சராக  டக்லஸ் தேவனந்தா, தொலை தொடர்பு , போக்குவரத்து துறை அமைச்சராக பண்டுலா குணவர்தனா,  சுகாதாரம் மற்றும் நீர் வளத்துறை அமைச்சரா ஹெகலியா ராம்புக்வெல்லா, தொழில்துறை அமைச்சராக ரமேஷ் பதிராணா, வேளாண் துறை, வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சராக மகிந்தா அமரவீரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மதம் மற்றும் கலாச்சார துறை அமைச்சராக விதூரா விக்ரமானயாகா, சுற்றுசூழல் துறை அமைச்சராக நசீர் அகமது, நீர் பாசனம்- விளையாட்டு துறை அமைச்சராக  ரோஷன் ராணாசிங்க ஆகியோரை அதிபர் நியமனம் செய்துள்ளார்.

மேலும் புதிய அமைச்சரவையில், மகிந்த ராஜபக்சே கீழ் செயல்பட்ட 5 அமைச்சர்கள் மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அமைச்சரவையை மாற்றி அமைத்தும், நிதி நெருக்கடியை சமாளிக்க நிதித்துறை அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாதது அரசியல் நோக்கர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.