ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு உக்ரைன் அரசிடம் இழப்பீடு கோரும் மக்கள்...! இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படுமா.?

ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்த மற்றும் முழுமையாக  அழிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு கோரி  உக்ரைன் அரசிடம் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. 

ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு உக்ரைன் அரசிடம் இழப்பீடு கோரும் மக்கள்...! இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படுமா.?

கிழக்கு உக்ரைனுக்கு இலக்கை மாற்றும் வரை, உக்ரைனின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களை ரஷ்ய ராணுவம் பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளால் தகர்த்தது. குடியிருப்புகள் பெரும் சேதமடைந்ததுடன் பல கிராமங்கள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு அழிவைச் சந்தித்துள்ளன. ரஷ்ய  படைகள் வெளியேறிய பின் அங்கு மீண்டும் வந்த உக்ரைன் மக்கள், தங்கள் வீடு இருந்த இடம் கூட தெரியாத பரிதாப நிலைக்கு ஆளானார்கள். 

இதையடுத்து சேதமடைந்த வீடுகளை சீரமைக்க மற்றும் முழுமையாக அழிந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடு கட்ட நிதி உதவி கோரி அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நிதி உதவி பெறுவதற்காக குடியிருப்பாளர்கள் தங்கள் சொத்துகளின் சேதங்களை குறிப்பிட்டு செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று உக்ரைன் அரசு அறிவித்தது. 

ஆன்லைனில் நடைமுறைகள் முடிந்து விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் அரசு மானியம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. ஆனால், ஸ்மார்ட் போன் வசதியில்லாத குடியிருப்பாளர்கள் மற்றும் தாக்குதலில் வீட்டுப் பத்திரங்களை இழந்தவர்கள் குறித்த தெளிவுகள் தரப்படாததால் அவர்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. 

இதனிடையே வீட்டுச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான  வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்டிருந்தாலும்  நாடாளுமன்றத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இந்நிலையில், தற்காலிக ஏற்பாடாக, வீடற்ற குடும்பங்கள் காலியாக இருக்கும் எந்த ஒரு வீட்டிலும் குடியேறலாம் என்று உக்ரைன் அரசு கூறியுள்ளது. ஆனால் அதிலும் ஒரு நிபந்தனை. முன்பு குடியிருந்த வீடுகளுக்கு ஒப்பான வீடுகளில் மட்டுமே  பொதுமக்கள் குடியேறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.