இலங்கை தமிழர்கள் எதிர்ப்பை மீறி கோத்தபயே ராஜபக்சேவை சந்தித்த பிரதமர் மோடி...

இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சேவுக்கு எதிராக ஸ்காட்லாந்து தமிழர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கு கோத்தபயே ராஜபக்சேவை பிரதமர் மோடி சந்தித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தமிழர்கள் எதிர்ப்பை மீறி கோத்தபயே ராஜபக்சேவை சந்தித்த பிரதமர் மோடி...

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் குவிந்துள்ளனர். இதைப்போல, இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சேவும், கிளாஸ்கோ நகருக்கு சென்றுள்ளார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இலங்கையில் தமிழினப் படுகொலைக்குக் காரணமான போர்க்குற்றவாளி கோத்தபயே ராஜபக்சேவை பிரிட்டன் அரசு கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

கிளாஸ்கோ நகரில் கோத்தபயே ராஜபக்சே தங்கியிருக்கும் ஹோட்டலை முற்றுகையிட்டு, ஸ்காட்லாந்து தமிழர்கள் போராட்டம் நடத்தினர். தமிழீழ விடுதலை புலிகளின் கொடியுடன் ஒன்று திரண்டு, கோத்தபயே ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட, அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பருவநிலை மாற்ற மாநாடு நடைபெறும் கிளாஸ்கோவில், கோத்தபயே ராஜபக்சேவை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். மேலும், இந்த சந்திப்பு தொடர்பான படங்களை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, பல்வேறு உலக தலைவர்களுடன் உரையாட ஒரு அற்புதமான வாய்ப்பை கிளாஸ்கோ உச்சி மாநாடு வழங்குவதாக கூறியுள்ளார். கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக ஸ்காட்லாந்து தமிழர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி ராஜபக்சேவை சந்தித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.