உக்ரைனில் சைபர் தாக்குதல் வியூகத்தை மாற்றும் ரஷ்யா!

உக்ரைன் நாட்டின் கம்ப்யூட்டர் தொழிநுட்பங்களில் சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் சைபர் தாக்குதல் வியூகத்தை மாற்றும் ரஷ்யா!

நேட்டோ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விரும்புகிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த இணைப்பிற்கு ஆதரவளித்து வருகின்றன.
  
இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, உக்ரைன் எல்லையில் ஒன்றரை லட்சம் ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது.இதையடுத்து, 'உக்ரைனில் ரஷ்ய படைகள் சிறிதளவு நுழைந்தால் கூட அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கையை அமெரிக்கா முடிவு செய்யும்' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இந்த பேச்சு ஐரோப்பாவில் சர்ச்சையை கிளப்பியது.

'உக்ரைன் சிறிய நாடு என்பதால் சிறிதளவு ரஷ்ய படை நுழைவதை பொறுத்துக் கொள்ள முடியுமா?' என, ஐரோப்பிய தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து 'உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தினர் சிலர் நுழைந்தால் கூட, அதை படையெடுப்பாக கருதி ரஷ்யா மீது கடுமையான பொருாளதார தடை விதிக்கப்படும்' என, அமெரிக்க வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது.

இதற்கிடையே உக்ரைன் எல்லைக்குள் ராணுவத்தை அனுப்பாமல் 'சைபர்' தாக்குதல் எனப்படும் கணினி ஒருங்கிணைப்பில் நாசகர நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொள்ளும் என, தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ளது.இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று ரஷ்யாவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.