உக்ரைன் மீது ராணுவ தாக்குதலை தொடங்கிய ரஷ்ய படை - குறுக்கிடுபவர்கள் மீதும் தக்க பதிலடி கொடுக்கப்படும் - ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தனது படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டதை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கியேவில் ரஷ்ய படை தாக்குதலை தொடங்கியுள்ளது. 

உக்ரைன் மீது ராணுவ தாக்குதலை தொடங்கிய ரஷ்ய படை - குறுக்கிடுபவர்கள் மீதும் தக்க பதிலடி கொடுக்கப்படும் - ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் எல்லையில் ரஷ்யா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தனது படைகளை குவித்து போர் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது. போரை தவிர்க்க அமெரிக்கா உள்பட உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.

உக்ரைன் - ரஷ்யா இடையே சமரசத்தை ஏற்படுத்த ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவை மத்தியஸ்தம் செய்யும் மூயற்சியில் இறங்கின. ஆனால், அனைத்தையும் மீறி உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உக்ரைன் எல்லையில் முகாமிட்டிருந்த ரஷ்ய படைகள் உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளன.

உக்ரைன் தலைநகர் கியேவில் உள்ள அந்நாட்டின் சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றும் வகையில் ரஷ்யா  தாக்குதல்களை நிகழ்த்தி வருவதாகவும், இதற்கு உக்ரைன் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் விமானப்படை இதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சில மணி நேரங்களிலேயே விமான நிலையத்தை ரஷ்யா கைப்பற்றக் கூடும் என அஞ்சப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும், ரஷ்ய - உக்ரைன் பிரச்சினையில் யாரேனும் குறுக்கிட்டால் அவர்கள் மீதும் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் உறுதிப்பட எச்சரித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்ட போரைத் தேர்ந்தெடுத்து உள்ளதாகவும், அது பேரழிவைத் தருவதோடு, உயிரிழப்பு மற்றும் துன்பத்தை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதல் கொண்டு வரும் இறப்பு மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.