இலங்கை அதிபருக்கு அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது :  மாலத்தீவு மக்கள் போர்க்கொடி !!

மாலத்தீவுக்கு தப்பிச்சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை, உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இலங்கை அதிபருக்கு அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது :  மாலத்தீவு மக்கள் போர்க்கொடி !!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக கொந்தளித்த அந்நாட்டு மக்கள், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். முன்னதாக இதை அறிந்ததும், அங்கிருந்து வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையிலேயே தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது. 

இந்தநிலையில் இன்று அதிகாலை அவர் மாலத்தீவின் ராணுவ விமானம் மூலம் மாலிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருடன் அவரது மனைவி மற்றும் இரு பாதுகாவலர்கள் உடன் சென்றதாகவும், அவர் மாலியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

முன்னதாக கோத்தபய தரையிறங்கிய போது அவருக்கு அடைக்கலம் தரக்கூடாது என மாலத்தீவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.  அங்குள்ள மக்கள் கோத்தபயவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர், பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் கோத்தபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடுமாறு மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர்  தைய்யிப் கோரியுள்ளார். மாலத்தீவில் கோத்தபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு செல்ல இந்தியா எந்தவகையிலும் உதவி செய்யவில்லை என இந்திய தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.