விண்வெளித் தொடர்பு மூலம் ராணுவப் பயிற்சிகளை ஒருங்கிணைக்கும் சீனா-ரஷ்யா! கவலையடையும் அமெரிக்கா

ரேடார்கள் மற்றும் அதிநவீன ஆயுத அமைப்புகளைத் தடுக்க விண்வெளித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் திட்டம் சீனாவிடம் இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விண்வெளித் தொடர்பு மூலம் ராணுவப் பயிற்சிகளை ஒருங்கிணைக்கும் சீனா-ரஷ்யா! கவலையடையும் அமெரிக்கா

அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு முகாமை, அதிபர் பைடனின் நிர்வாக நடவடிக்கை பரிசீலனைக்காக 80 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக சிங்கப்பூர் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,  விண்வெளி தொழில்நுட்பத்தில் சீனா தன்னிறைவு நிலையை அடைந்துள்ளது மற்றும் பெரிய மோதலில் வெற்றிபெறும் திறன்களைப் பெற்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.   சீனா மற்றும் ரஷ்யாவின் விண்வெளி மற்றும் எதிர் விண்வெளித் திறன்களும் அதிகரித்து வருவதுடன் இரு நாடுகளும் ராணுவப் பயிற்சிகளை விண்வெளித் தொடர்பு மூலம் ஒருங்கிணைத்து வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சீனாவின் செயல்பாடுகளில்தான் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி  வருவதாகவும்,  விண்வெளியில் சீனாவின் விரைவான வளர்ச்சி அந்நாட்டுக்கு கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிராந்திய ராணுவ மோதலின் போது அமெரிக்காவின் தலையீட்டை தடுக்க சீனா விண்வெளித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உள்ளதாகவும் செயற்கை கோள்கள் மற்றும் பிற சென்சார்களை அழிப்பது அல்லது கைப்பற்றுவதன் மூலம்  ராணுவத்திற்கு துல்லியமான வழிகாட்டுதலை சீனா கடினமாக்கும் என்று அமெரிக்கா அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.