"பொருளாதார நெருக்கடியே, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம்" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியே, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

"பொருளாதார நெருக்கடியே, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம்" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது தொடர்பாக மக்களவையில், எம்.பி. விஜய் வசந்த் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்:

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது என்று குறிப்பிட்டார். இங்கிலாந்து நாட்டின் பவுண்ட், ஜப்பானின் யென் மற்றும் யூரோவின் மதிப்புகளும் இந்திய ரூபாயின் மதிப்பை விட குறைவாக இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

மேலும், இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் வருவாய், கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது பன்மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திமுக மக்களவை உறுப்பினர் டி. ஆர்.பாலு எழுத்துப்பூர்வமாக கேள்வி:

இதனிடையே எரிபொருளுக்கான வரியை சீராக அமைக்க ஜிஎஸ்டி திட்டத்தின் கீழ் பெட்ரோல், டீசலை விலையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டம் வைத்துள்ளதா என திமுக மக்களவை உறுப்பினர் டி. ஆர்.பாலு எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில்:

இதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில், மத்திய அரசு அவ்வபோது எரிபொருளுக்கான கலால் வரியை குறைத்து வருவதாக கூறினார். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருமாறு, இதுவரை எந்த மாநிலங்களும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.