131 வது நாளாக நீடிக்கும் உக்ரைன் ரஷ்யா போர் - லுஹான்ஸ்க் மண்டலத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

131 வது நாளாக நீடிக்கும் உக்ரைன் ரஷ்யா போர் - லுஹான்ஸ்க் மண்டலத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணம் தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா தொடக்கத்தில் தலைநகர் கீவை மட்டுமே குறி வைத்தது. ஆனால் அதில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காததால் கிழக்கு உக்ரைன் பக்கம் கவனத்தை திருப்பியது.

டான்பாஸ் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களை கைப்பற்றினால் கிரீமியாவுடன் இணைத்து கிழக்கு உக்ரைனை முழுமையாக கைப்பற்றி விடலாம் எனக் கணக்குப் போட்டது.

அதன்படி அந்த பகுதியில் முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. அதன் முதல் பலன் மரியுபோல் நகரம் வீழ்ந்தது. அதனைத் தொடர்ந்து செவோரோடொனட்ஸ்க், லிசிசான்ஸ்க் என தொடர் வெற்றிகளைப் பெற்று தற்போது லுஹான்ஸ்க் மண்டலத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது ரஷ்யா.

ஏறக்குறைய கிழக்கு உக்ரைன் ரஷ்யா வசமாகி விட்டது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒப்புக் கொண்டுள்ளார். கடைசி நகரமாக இருந்த லிசிசான்ஸ்க் நகரில் இருந்த படைகள் பின்வாங்கி விட்டதாகவும், ஆனால் மீண்டும் கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றுவோம் என்றும் சூளுரைத்துள்ளார்.