பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த உக்ரைன் அதிபர்...! போரில் மோடியின் நிலைப்பாடு என்ன?

உக்ரைன் எல்லையில் பல மாதங்களாக படைகளைக் குவித்து வந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீதான தனது தாக்குதலை தொடங்கியது. நான்காவது நாளாக இன்றும் போர் தொடர்ந்து நடந்து வருகிறது.

பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த உக்ரைன் அதிபர்...! போரில் மோடியின் நிலைப்பாடு என்ன?

முதலில் வான்வழி தாக்குதலை நடத்திய ரஷ்யா பின் பீரங்கி மற்றும் ஆயுதங்கள் மூலம் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் எழுபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை வெற்றிகரமாக அழித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றினால், கிட்டதட்ட மொத்த உக்ரைனும் தன் கட்டுப்பாட்டில் வந்ததைப் போல என்பதால்,  உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம் வேகமாகத் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறத் தொடங்கியது. மூன்றாவது நாளான நேற்று தலைநகர் கீவ்வுக்கு வெளியே ரஷ்யா ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இருப்பினும், அங்குள்ள உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து துணிச்சலுடன் போராடி வருகின்றனர்.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. ஐரோப்பா கண்டத்தின் முன்னணி மனித உரிமைகள் அமைப்பான ஐரோப்பிய கவுன்சில் உள்ள  47 உறுப்பு நாடுகளில் ரஷ்யாவும் உறுப்பு நாடாக உள்ளது. இந்த நிலையில், ஐரோப்பிய கவுன்சிலின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ உரிமைகளில் இருந்து ரஷ்யா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய அதிபர் புதினின் சொத்துகளை முடக்க ஒப்புதல் அளித்திருந்தது. உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், சீனா, சிரியா போன்ற சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ளது.இதனிடையே ஐநா பாதுகாப்பு கவுன்சில் இல்  ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்தியா, உள்பட 3 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்த நிலையில், இந்த தீர்மானத்தில் ரஷ்யாவுக்கு எதிராக 11 நாடுகள் வாக்களித்தது.  பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த போதிலும், ரஷ்யா தன்னிடம் இருந்த வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த தீர்மானத்தை முறியடித்துள்ளது (வீட்டோ எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும். இந்த அதிகாரத்தின் படி, ஒரு தீர்மானத்தில் பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (இதர உறுப்பு நாடுகள்) ஆதரவு பெற்றிருந்தாலும் இந்த 5 நாடுகளின் எவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்தத் தீர்மானம் தோல்வியடையும்). அதே நேரம், ஐநா கவுன்சில் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததை ரஷ்யா வரவேற்று இருந்தது.

இதனிடையே உலக அரங்கில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் சிலன்ஸ்கய்யா உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன்படி, இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடியிடம் நேற்று அதிபர் வோலோடிமிர் தொலைப்பேசி வழியாகப் பேசியுள்ளார். அப்போது ஐநா பாதுகாப்பு கவுன்சில் இல் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். உக்ரைன் மீது ரஷ்யா எடுத்து வரும் போர் நடவடிக்கை குறித்து விளக்கினேன்.

1,00,000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் இப்போது எங்கள் நாட்டில் உள்ளனர். அவர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மீது நயவஞ்சகமாகத் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். பாதுகாப்பு கவுன்சிலில் எங்களுக்கு அரசியல் ஆதரவை வழங்குமாறு இந்தியாவிடம் வலியுறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களை உலக நாடுகள் ஒன்றாக இணைந்து நிறுத்த வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தான், உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் பேசி இருந்த நிலையில், இப்போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் அங்கிருக்கும் நிலைமையை விளக்கி உள்ளார்.

உக்ரைன் அதிபரின் கோரிக்கைத் தொடர்பாகப் பிரதமர் அலுவலகமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "உக்ரைனில் நடந்து வரும் மோதல் குறித்து அதிபர் வோலோடிமிர் பிரதமரிடம் விளக்கிய நிலையில்  இந்த போரினால் ஏற்படும் உயிரிழப்புக்குப் பிரதமர் தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார். வன்முறையை உடனடியாக நிறுத்தவும், பேச்சுவார்த்தைக்குத் திரும்பவும் வலியுறுத்தினார். அமைதிக்கான முயற்சிகளுக்கு இந்தியாவும் பங்களிக்கும் எனக் குறிப்பிட்டார். மேலும், உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்கள் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் கவலை தெரிவித்தார். இந்தியர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்ற உதவும்படி கோரிக்கை விடுத்தார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா இதுவரை நடுநிலை வகித்து வரும் நிலையில், உக்ரைன் அதிபரின் கோரிக்கைக்கு இந்தியாவின் செயல்பாடு என்னவாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.