என் ரெசியூம் வேணுமா? இந்த க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்யுங்க..! லண்டன் இளைஞரின் புது ஐடியா..!

நிராகரிப்புகள் ஒருவரை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது..!

என் ரெசியூம் வேணுமா? இந்த க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்யுங்க..! லண்டன் இளைஞரின் புது ஐடியா..!

என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டாலும் கூட, இன்றும் நாம் வேலைக்காக ஒரு நிறுவனத்திற்கு செல்லும் போது கையில் ரெசியூம் என சொல்லப்படக் கூடிய சுய விவரங்கள் அடங்கிய தற்குறிப்பினை கையில் எடுத்து செல்வது வழக்கமான ஒன்று தான். இருப்பினும் கூட பல இணையதளம் வழியாக தங்களது ரெசியூமை அப்லோட் செய்து வருகின்றனர். அதன் மூலமும் சிலருக்கு வேலை வாய்ப்புகள் வரும். ஆயினும் நேர்காணல் செல்லும் போதெல்லாம் ஜெராக்ஸ் கடைக்கு சென்று ரெசியூமை ப்ரிண்ட் எடுத்து கையில் எடுத்து கொண்டு செல்வது, சற்று கடினமாகத் தான் இருக்கும். சமயத்தில் அந்த ரெசியூமை கசக்காமல் எடுத்து செல்வதே பெரிய டாஸ்க்காக இருந்து விடும். இதனையெல்லாம் சிந்தித்து பார்த்த லண்டனை சேர்ந்த இளைஞர் ஒரு சூப்பர் ஐடியாவை கண்டுபிடித்து, அதன் மூலம் வேலை தேட ஆரம்பித்துள்ளார். 

க்யூ ஆர் கோடு மூலம் ரெசியூம்..

ஜார்ஜ் கோர்னியூக் என்ற 21 வயதான இளைஞர், நிறுவனங்களை கவரும் விதமாக புதுமையான முயற்சியினை எடுத்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள செயின்ட் எட்மண்ட் கல்லூரியில் பொருளாதாரம் படிக்கும் கோர்னியூக், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக வேலை தேடி வந்துள்ளார். பல இடங்களில் தனது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், விரக்தியடைந்த ஜார்ஜ், நிறுவனங்களை கவர வித்தியாசமான முறையை கையாள திட்டமிட்டுள்ளார். அதன்படி ஒரு பலகையில் சில கியூ ஆர் கோடுகளை பிரிண்ட் எடுத்து ஒட்டி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைத்துள்ளார். அந்த க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தால், அதில் ஜார்ஜின் ரெசியூமை பார்க்க முடியும். இதுகுறித்து ஜார்ஜ் கூறுகையில், நேரடியாக நிறுவனர்களை அணுக முடியாத சூழலில், அவர்களை சென்றடைவது கடினம், 20-முறை பல நிறுவனங்களால் நிராகரிப்புக்கு உள்ளான நான், அதிகாரிகளை கவர திட்டமிட்டு, இந்த ஐடியாவை செய்தேன் என்கிறார். இவரது இந்த புதிய ஐடியா நம்முடைய இளைஞர்களுக்கும் உதவுமா?