உலகப் போர் ஆகுமா? உக்ரைன் விவகாரம்..அச்சத்தில் உலக நாடுகள்!

ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் ராணுவம் முழுமையும் உக்ரைன் எல்லையில் குவிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ கூறியுள்ளது போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

உலகப் போர் ஆகுமா?  உக்ரைன் விவகாரம்..அச்சத்தில் உலக நாடுகள்!

நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிக்கப்பட்டது. இதனை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் எதிர்த்து வருவதுடன் உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் படைகளையும் அங்கு அனுப்பியுள்ளனர்.  இந்த விவகாரத்தில் இரு தரப்பும் தொடர் உறுதி காட்டி வருவதால், உலகப் போராக மாறி விடுமோ என்று வளரும் நாடுகள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்தநிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் ராணுவம் உக்ரைன் எல்லையில் முழுமையாக  களமிறக்கப்படும் என்று அதன் அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ தெரிவித்துள்ளார். ரஷ்யாவும், பெலாரசும் இணைந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். 

அந்த வகையில் இந்த ஆண்டு நாட்டின் தெற்கு எல்லையை பலப்படுத்தும் வகையில் உக்ரைன் எல்லையில் ராணுவம் குவிக்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும், இது ரஷ்யாவுக்கு ஆதரவான நடவடிக்கை என்றே பார்க்கப்படுகிறது. இதேபோல், பயிற்சி என்ற பெயரில் ரஷ்ய போர்க் கப்பல்களும், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உள்ள டென்மார்க் நாட்டின் போர்க்கப்பல்களும் பால்டிக் கடல் பகுதியில் முகாமிட்டுள்ளன. தொடரும் நிகழ்வுகள், போர் பீதியை அதிகரித்துக் கொண்டே செல்வது பல்வேறு நாடுகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.