இலங்கையில் தீவிரமடையும் போராட்டம் : கண்ணீர் புகை குண்டு வீச்சில் இளைஞர் பலி !!

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் தீவிரமடையும் போராட்டம் : கண்ணீர் புகை குண்டு வீச்சில் இளைஞர் பலி !!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறிவரும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில்விக்ரமசிங்கே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஏற்கெனவே அதிபர் மற்றும் பிரதமர் மாளிகைகளை கைப்பற்றிய பொதுமக்கள், தற்போது பிரதமர் அலுவலகத்திலும் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமிங்கேவை கோத்தபய நியமித்துள்ளார். இதனால் கொந்தளிப்பான ஆயிரக்கணக்கான மக்கள், ரணில் விக்ரமசிங்கேவும் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே, ஃபாசிஸ்டுகள் ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க ராணுவம் மற்றும் காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.  

இதனை தொடர்ந்து,பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே ஃபிளவர் வீதியில் போராட்டம் நடத்திய போராட்டக்கார்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் வீசிய கண்ணீர் புகை குண்டு வீச்சில் சிக்கி, 26 வயது இளைஞர் உயிரிழந்தார். போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

போராட்டத்தை ஒடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை மக்கள் ராணுவத்திற்கும், காவல்துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ராணுவ தலைமை தளபதி ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.