ஹாரியின் சட்டை காலரை பிடித்து கீழே தள்ளிய வில்லியம்ஸ் - ஹாரியின் சுயசரிதையில் புதைந்துள்ள ரகசியம்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் - டயானா தம்பதியின் 2 ஆவது மகன் இளவரசர் ஹாரி எழுதிய சுயசரிதை புத்தக சர்ச்சை.
ஹாரி - மேகன்:
இளவரசர் ஹாரி - நடிகை மேகன் மார்கெல் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அரச குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார் மேகன். இறுதியில் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறினர்.
முதல் சர்ச்சை:
வெளியேறிய பின்னர் தங்களது காதல் மற்றும் திருமண வாழ்வு குறித்து ஹாரி - மேகன் தம்பதி அளித்த பல்வேறு பேட்டிகள், இங்கிலாந்து அரச குடும்பத்தில் பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து ஏற்படுத்தியது. மேகன் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் எப்படி இருக்குமோ என்றெல்லாம் அரச குடும்பத்தினர் ரொம்பவே கவலைப்பட்டார்கள்; பிறக்கும் குழந்தைக்கு அரச குடும்ப பாதுகாப்பு வழங்கப்படாது, இளவரசர் பட்டம் சூட்டப்படாது என்றெல்லாம் அரண்மனை வட்டாரத்தில் பேசியதாக, அவர்கள் வெளிப்படையாக சொல்லியிருந்தது, பேசுபொருளானது.
ஹாரி சுயசரிதை:
தற்போது இளவரசர் ஹாரி ஸ்பேர் (spare) என்ற பெயரில் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த புத்தகம் வருகின்ற 10 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. எனினும், இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில விஷயங்கள் வெளியே கசிந்துள்ளன. அந்த விஷயம் தான் தற்போது இங்கிலாந்து முழுக்க பேசுபொருளாகியுள்ளது.
ஹாரி - வில்லியம்ஸ்:
அதில், "கடந்த 2019ம் ஆண்டு மேகன் மார்கெல் பற்றி, லண்டன் வீட்டில் எனக்கும், என் சகோதரர் வில்லியமுக்கும் தகராறு வந்துவிட்டது. அப்போது வில்லியம், மேகனை கடினமானவர், முரட்டுத்தனமானவர், கரடுமுரடானவர் என்றெல்லாம் விமர்சித்தார். ஒரு கட்டத்தில் வில்லியம், என்னுடைய சட்டை காலரை பிடித்து இழுத்தார். என்னுடைய கழுத்தில் கிடந்த சங்கிலியை பிய்த்து எறிந்தார். என்னையும் கீழே தரையில் தள்ளிவிட்டார். நான் தடுமாறி நாய்க்கு தீனியிடும் கிண்ணத்தில் விழுந்துவிட்டேன். அந்த கிண்ணம் உடைந்து, என்னுடைய முதுகில் காயத்தை ஏற்படுத்திவிட்டது.
முதுகில் காயம்:
நான் ஒரு நிமிஷம் அப்படியே படுத்துவிட்டு, அதற்கு பிறகுதான், கொஞ்சம் தெளிந்து, மெதுவாக எழுந்து வந்தேன். கீழே விழுந்துவிட்டதால், என்னுடைய முதுகில் காயம் ஏற்பட்டது. இவை எல்லாம் மிக வேக வேகமாக நடந்து முடிந்துவிட்டன என்றெல்லாம் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களால் அரசு குடும்பத்தினர் ஹாரி மீது கோபம் கொள்ளக்கூடும் என்றும் கூறப்படுகிறது.