உதவும் இந்தியா....உள்ளம் உருகி பேசிய இலங்கை கிரிக்கெட் வீரர்....

உதவும் இந்தியா....உள்ளம் உருகி பேசிய இலங்கை கிரிக்கெட் வீரர்....

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை இந்தியா செய்து வருவது பெருமை அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னே பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 இலங்கையின் நிதி நெருக்கடி:

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பி அளிக்காததால் ஏற்பட்ட கடன் சுமையால் இலங்கை தவித்து வருகிறது.மேலும், தேவையற்ற வரி குறைப்பு, கொரோனா மற்றும் தேவாலயத்தின் மீதான தாக்குதலால் சுற்றுலா பயணிகள் வருகை நின்றதால் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. முக்கிய ஏற்றுமதி பொருளான தேயிலை கொரோனா கட்டுப்பாடுகளால் ஏற்றுமதி செய்யமுடியாமல் போனது மற்றும் மிக முக்கியமாக குடும்ப அரசியல் என பல காரணங்கள் இங்கையின் தற்போதைய வீழ்ச்சிக்கு காரணமாக சொல்லப்படுகின்றது.

அத்தியாவசிய பொருட்கள் முதல் எரிபொருள் வரை:

இலங்கையின் நிதி நிலைமை மோசமடைந்து உள்ளதால் அங்கு பால், அரிசி என அத்தியாவசிய பொருட்கள் முதல் உயிர்காக்கும் மருந்து பொருள்கள் வரை அனைத்திற்கும் தட்டுபாடு நிலவுகிறது. அதன் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளதால் சாதாரண மக்கள் அதை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

மக்கள் போராட்டம்:

இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் இலங்கைக்கு உணவு பொருட்களையும், எரிபொருளை கொடுத்து உதவி வந்த நிலையில், பொருளாதார நிலைமையை சமாளிக்க முடியாமல் துயரப்பட்ட மக்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த மக்கள் அதை தங்கள் வசம் கொண்டு வந்தனர். பிரதமரின் வீடு எரிக்கப்பட்டது.

சமிக்க கருணாரத்னே பெருமிதம்:

இந்தியா அதிக அளவில் உதவி வருவதால் சகோதர நாடு போன்றது எனவும் நெருக்கடியான சூழலில் உதவி வருவதால் இந்தியாவுக்கு நன்றி கூற விருப்பப்படுவதாகவும் கூறியுள்ளார் இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னே.  மேலும் இலங்கை இந்தியாவுடன் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது எனவும் எப்போதும் துணையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

மேலும் அவர் இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு மிகவும் மோசமாக உள்ளதால் இரண்டு நாட்களாக காத்திருப்பதாக கூறியுள்ளார்.  எரிபொருள் தட்டுப்பாட்டால் பயிற்சிக்கு கூட செல்ல முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கோப்பை 2022 இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  ஆனால் தற்போதைய சூழலில் இது சாத்தியமா என்ற கேள்வி எழும்பியுள்ளது.