திவாலான நாட்டை மற்றுமொரு நாடு காப்பாற்ற முடியாது என இந்தியாவைச் சொல்கிறாரா ஜே.வி.பி தலைவர்!

திவாலான நாட்டை மற்றுமொரு  நாடு காப்பாற்ற  முடியாது என இந்தியாவைச் சொல்கிறாரா ஜே.வி.பி தலைவர்!

பொருட்களின் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கொழும்பு நுகேகொடை பிரதேசத்தில் இன்று பேரணியை முன்னெடுத்தது.

 மக்கள் விடுதலை முன்னணி பேரணி

 நுகேகொடையில் ஆரம்பமான பேரணி விஜேராம சந்திவரை சென்றது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். நுகேகொடையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி பாராளுமன்றத்தை கலை!தேர்தலை நடத்து! எனும் முழக்கத்தை முன்வைத்து விஜேராம சந்திவரை சென்றது.

பேரணியின் இறுதியில் ஜே.வி.பி.யின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க உரையாற்றினார். போராட்டங்களை நசுக்கி ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.நுகேகொடையில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் பங்கேற்றபோதே அவர் இதை குறிப்பிட்டார். மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க 134 பேரால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக ஆட்சி செய்கிறார். எனவே அவர், தம்மை தேர்வு செய்த ராஜபக்ச சகோதரர்களை சந்தோசப்படுத்தும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமே நேற்று யூனியன் பிளேஸ் பகுதியில் வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் அமைதிப் பேரணியின் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலாகும் என்று அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.எனினும் தமது பேரணி மீது ரணில் தாக்குதல்களை நடத்தினால்.. தமது பேரணி நுகேகொடையில் நிறுத்தப்படமாட்டாது. பேரணி  விரிவுப்படுத்தப்படும் என்று திசாநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.


மோசடிக்காரர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்

கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற போராட்டங்களின் போது கோரப்பட்ட முக்கிய கோரிக்கைகளில் மோசடிக்காரர்களை நீதிக்கு முன் நிறுத்தவேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் தமது அதிகாரத்தை பயன்படுத்தி தமது நண்பரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை ரணிலால் இலங்கைக்கு அழைத்து வரமுடியுமா என்று அநுரகுமார கேள்வி எழுப்பினார்.

இதேவேளை திவாலான நாட்டை மற்றும் ஒரு நாடு காப்பாற்றமுடியாது.இந்தியாவை பொறுத்தவரையில் அது நட்பு ரீதியாகவே இலங்கைக்கு உதவி வருகிறது. இந்தநிலையில் பெற்ற கடனை திருப்பி தரமுடியாது என்று சர்வதேசத்துக்கு அறிவித்த இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று அந்த கடனை தாமதமாக தருவதாக அறிவிப்பதை உறுதிப்படுத்தும் செயற்திட்டமே முன்னெடுக்கப்படுகிறது என்றும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வேறு எந்த விடயமும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இடம்பெறப்போவதில்லை என்று அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.