காலிமுகத்திடல் போராட்டம் நின்றாலும் எனது போராட்டத்தை கைவிட மாட்டேன்...இலங்கை பேராயர் மெல்கம் ரஞ்சித்!

காலிமுகத்திடல் போராட்டம் நின்றாலும் எனது போராட்டத்தை கைவிட மாட்டேன்...இலங்கை பேராயர் மெல்கம் ரஞ்சித்!

காலிமுகத்திடல் போராட்டம் நின்று போனாலும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தான் முன்னெடுத்து செல்லும் போராட்டத்தை நியாயம் கிடைக்கும் வரை கைவிடப் போவதில்லை என கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போப் பிரான்சிஸ் வழங்கிய சுமார் 4 கோடி ரூபாவை பகிர்ந்தளிப்பதற்காக கொழும்பு கொச்சிக்கடை புதிய அந்தோணியார் தேவலாயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இதனை கூறியுள்ளார்.

இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதித்திட்டத்தின் நிழல்கள் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும்  அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சாதமான நடவடிக்கைகளை எடுத்ததால் மாத்திரமே தற்போதைய ஜனாதிபதியை ஏற்றுக்கொள்வேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்குமாறு பாப்பரசர் பல முறை கோரிக்கை விடுத்த போதிலும் இலங்கையில் நியாயம் கிடைப்பது மிகவும் அரிது. அரசியல் தலைவர்கள் சட்டத்தில் தலையிடுவதே இதற்கு காரணம். பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் சஹ்ரான் ஹாசீமை கைது செய்ய தயாராக இருந்த போது பலமிக்க நபர்களை கொலை செய்த சதித்திட்டம் தீட்டினார் என்ற பொய் குற்றச்சாட்டில் அந்த அதிகாரியை கைது செய்தனர்.

அந்த அதிகாரியை கைது செய்து தாக்குதல் நடத்தவிருந்தவர்கள் முன்நோக்கி நகர சுதந்திரத்தை வழங்கினர். சஹ்ரான் ஹாசிம் மாத்திரமின்றி இதில் சம்பந்தப்பட்டவர்களும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.