ஆப்கானிஸ்தான் ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு!

ஆப்கானிஸ்தான் ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு!

தூதரகத்தின் நுழைவாயில் அருகே தற்கொலை  தாக்குதலில்வெடிக்கச் செய்ததில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

உயிரிழப்பு குறித்த விவரங்கள்

இறந்தவர்களில் ரஷ்ய தூதரகத்தின் இரண்டு ஊழியர்களும் அடங்குவர் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ஊழியர்கள் யார், எப்படி இறந்தார்கள் என்ற விவரங்கள் எதையும் அமைச்சகம் வழங்கவில்லை. ரஷ்ய விசாவிற்கு விண்ணப்பிக்க ஏராளமான மக்கள் கூடியிருந்த தூதரகத்திற்கு அருகிலேயே இந்த வெடிகுண்டுத் தாக்குதல் நடந்துள்ளது.

வெடிகுண்டு வெடித்தபோது ஏராளமான மக்கள் அந்த இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய தூதரகத்திற்கு நெருக்கமான நேரில் கண்ட சாட்சிகள், உயிரிழப்புகள் மிக அதிகமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் இன்னும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் உயிரிழப்புகள் குறித்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.

சுட்டுக் கொலை

தற்கொலை தாக்குதல் நடத்தியவர், இலக்கை அடைவதற்கு முன்பே, ரஷ்ய தூதரக காவலர்களால் அடையாளம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தாக்குதல் நடைபெற்ற காவல் மாவட்டத்தின் தலைவர் மவ்லவி சபீர் கூறியுள்ளார்.

தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. தலிபான்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டைக் கைப்பற்றிய பின்னர் அங்கு தூதரகத்தை வைத்திருக்கும் ஒரு சில நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. ரஷ்யா தலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், பெட்ரோல் மற்றும் பிற பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.