தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கோரி இலங்கையில் போராட்டம்!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கோரி இலங்கையில் போராட்டம்!

நீண்ட காலம் நடைபெற்ற உரிமைக்கான போராட்டத்தின் அடிப்படையிலும், நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் இலங்கையில் தமிழர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் போராட்டம் தொடங்கியது

இந்த 100 நாட்கள் நடைபெறவுள்ள போராட்டத்தின் முதலாம் நாள் மன்னார் மாவட்டத்தில் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த ஜனநாயக ரீதியான போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்துகொண்டு எமக்கான அரசியல் தீர்வை வலியுறுத்துவோம் என வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு

வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் நூறு  நாட்கள் நடைபெற உள்ள  செயல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று மன்னார் நகரிலுள்ள பிரதான சுற்றுவட்டத்துக்கு அருகில் நடை பெற்றது. கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் தலைப்பில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில்  மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குனர் யாட்சன் பிகிராடோ , மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அமைப்பின் இணைப்பாளர் எஸ். திலீபன்  மற்றும் கிராம அளவிலான அமைப்புகள்,விவசாய, மீனவ சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் , மாணவர் அமைப்புகள்,சிவில்  சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள்,  மன்னார் மெசிடோ  பணியாளர்களும் கலந்து கொண்டார்கள். இந்த செயல் திட்டத்தில் இணைந்து கொண்ட பொது மக்களால் மனு ஒன்றும் வாசிக்கப்பட்டது.