காசா எல்லையில் 11 நாட்கள் நீடித்த போர்… அப்பாவிகள் 263 பேர் பலியான சோகம்… பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு போர் நிறுத்தம்?

காசா எல்லையில் 11 நாட்கள் நீடித்த போர்… அப்பாவிகள் 263 பேர் பலியான சோகம்… பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு போர் நிறுத்தம்?

இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த 11 நாட்களாக நீடித்து வந்த போரானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறது.

அதேநேரம் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா பகுதியில் மத வழிபாட்டு தலத்தில் கடந்த 10-ஆம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பாலஸ்தீனத்தின் சார்பாக ஹம்மாஸ் அமைப்பு பதிலடி கொடுக்க இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இவ்வாறு மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் வான்வழி தாக்குதல்களை நிகழ்த்தி வந்தனர். இதில் இருதரப்பையும் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 263 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு காசா முனை பகுதி சீர்குலைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை மீண்டும் கட்டியெழுப்புவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தியது. அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிபர்களை தொடர்பு கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வர பல முறை வலியுறுத்தினார்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அண்டை நாடுகளான லெபனான், எகிப்து போன்ற இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுக்கு இடமில்லை என இரு நாடுகளும் கூறி வந்த நிலையில் இஸ்ரேல் நாட்டுடனான பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த ஒப்பந்தம் இன்று அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். காசாவின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.