விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை- எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டு

உலகின் பல்வேறு பாப் பாடகர்கள் கருத்து தெரிவித்த போதும் கூட விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டுக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், டிராக்டர் பேரணியில் கலந்துகொண்டார். இதனையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நமது நாட்டில் மிகப்பெரிய வணிகம் விவசாயம்தான் என்றும், ஏறக்குறைய 40 லட்சம் கோடி மதிப்புடையது எனவும் கூறினார்.
வேளாண்மை மட்டும்தான் பாரத மாதாவின் தொழில் எனக்கூறிய அவர், அதனை சிலர் சொந்தமாக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், பாரத மாதாவின் தொழிலை பிரதமர் மோடியின் சில நண்பர்கள் எடுத்துக் கொள்ள நாங்கள் அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உலகின் பல்வேறு பாப் பாடகர்கள் இந்திய விவசாயிகள் நிலை குறித்து கவலைப்பட்டு ஆதரவாக கருத்து தெரிவித்தும், விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை என குற்றம் சாட்டினார்.