இந்தியா

மசூதி கோபுரம் மீது ஏறி பாஜகவினர் தாக்குதல் – ம.பியில் பதற்றம்

ஏஐஎம்ஐஎம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுக்கு கண்டனம்

மத்தியப்பிரதேசத்தில் மசூதி கோபுரம் மீது ஏறி பாஜகவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில, 5 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மற்றும் துணை வலதுசாரி அமைப்புகள் சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்கு நிதி சேகரிப்பு பேரணிகள் கடந்த ஆறு நாட்களாக மத்திய பிரதேசம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்தூரில் நடந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் அங்கிருந்த மசூதியை சேதப்படுத்திய வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக 27 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் அங்குள்ள மண்டோசர் மாவட்டத்தில் டோரானா கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நிதி வசூலிக்கும் பிரச்சாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 20 கி.மீ தூரத்தில் இருந்து பேரணி மேற்கொண்டனர்.

இதில் சிலர் அங்கிருந்த இஸ்லாமியர்களின் வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகியது. அங்குள்ள மசூதி மீது ஏறியும், அந்தக் குழுவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். வீடியோ அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மீது கலவரம், குற்றவியல் மிரட்டல் மற்றும் ஆபாசமான செயல்கள் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சாந்தன்கேடி, உஜ்ஜையினி ஆகிய இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள்  பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள பாஜக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, இச்சம்பவத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் சில குறிப்பிட்ட வீடுகளில் இருந்து கற்கள் வீசப்பட்டதாகவும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு AIMIM கட்சித் தலைவர் அசதுதீன் உவைசி எம்.பி.. மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் முகமது ஷாபி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button