நீல நிற ஜெர்ஸியில் களமிறங்கும் கோலி டீம்… என்ன காரணம்?

கொரோனா போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நடப்பு ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நீல நிற உடையில் களமிறங்கவுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பலி எண்ணிக்கையும் பன்மடங்காக அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே கடும் பீதி நிலவி வருகிறது. மேலும் ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடும் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.

இதையடுத்து நாட்டின் இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க உலக அளவில் மக்கள் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணிகளும் தங்களால் இயன்ற உதவிகளை அறிவித்து வருகின்றன. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் அறக்கட்டளை மூலம் உதவிகளை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், கொரோனாவுக்கு நிதி திரட்டும் நோக்கிலும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி முடிவுசெய்துள்ளது.

இதற்கென ஐபிஎல்லின் ஒரு நாள் போட்டியில் நீல நிற உடையில் அந்த அணி களமிறங்கவுள்ளது. பின்னர் கையொப்பமிடப்பட்ட அந்த நீல நிற சீருடையை ஏலம் விடப்பட உள்ளது. இதன்மூலம் பெறும் நன்கொடை, பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் ஆக்சிஜன் தேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ‘Go Green’க்கு ஆதரவு தெரிவித்து முந்தைய ஆண்டுகள் நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஒரு நாள் ஆட்டத்தில் பெங்களூர் அணி பச்சை நிற உடையில் களமிறங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Back to top button