ஐபிஎல் திருவிழா…. பெங்களூர் அணியின் வெறித்தன ஆட்டம்… 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதரபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய 6-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். இதில் தேவ்தத் படிக்கல் 3வது ஓவரில் 11 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

விராட் கோலி 4 பவுண்டரிகளை விரட்டி 33 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதத்தை கடந்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக சஹா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். 9 பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த சஹா சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த மனீஷ் பாண்டே கேப்டன் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் அரைசதம் கடந்தார். 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர் பெங்களூரு வீரர் ஜேமிசன் பந்துவீச்சில் வெளியேறினார்.

இறுதியில் ஐதராபாத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ஐதராபாத் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

Back to top button