பொல்லார்ட் அதிரடி…. சென்னையை வீழ்த்திய மும்பை அணி

கைரன் பொல்லார்ட் மிரட்டல் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் 27-வது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 4 ரன்கள் எடுத்திருந்த கெய்க்வாட் மும்பை வீரர் போல்ட் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த டு பிளசிஸ் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இரு வீரர்களும் அரை சதம் கடந்தனர். 36 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்த மொயின் அலி, பும்ரா பந்து வீச்சில் வெளியேறினார். 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த டு பிளசிஸ், பொலார்ட் பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்துவந்த ரெய்னா 2 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அம்பதி ராயுடு மும்பை பந்து வீச்சை புரட்டி எடுத்தார். 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் உள்பட 72 ரன்கள் குவித்து அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஜடேஜா 22 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து, 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிகாக் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இரு வீரர்களும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். 24 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா, தாகூர் பந்து வீச்சில் வெளியேறினார்.

ஹர்திக் பாண்டியா 7 பந்துகளில் 16 ரன்கள் குவித்த நிலையில் சாம் கரன் பந்து வீச்சில் வெளியேறினார். மும்பை அணி வெற்றிபெற இறுதியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.பொலார்ட் களத்தில் இருந்தார்.அவர் திறமையை வெளிக்காட்டி சிக்சர் பறக்க விட்டு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்..

இதன் மூலம் மும்பை அணி வெற்றி இலக்கான 219 ரன்களை எட்டியது. இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

 

Back to top button