சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை அணி அதிரடி ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா ஓய்வு…

இலங்கையின் அணியின் ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியில் அதிரடியாக பேட்டிங் செய்வதிலும் வேகப்பந்து வீச்சிலும் தவிர்க்க முடியாத  ஆல்ரவுண்ட் வீரராக திகழ்ந்தார் பெரேரா.அதிரடி ஆட்டத்துக்குப் புகழ் பெற்ற திசாரா பெரேரா, சமீபத்தில் புதிய சாதனையை நிகழ்த்தினார். எந்த வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த முதல் இலங்கை வீரர் என்கிற சாதனையை அவர் படைத்தார். முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் கொண்ட வீரரான தில்ஹன் கூரே வீசிய ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அசத்தினார் பெரேரா.

எஸ்.எல்.சி. மேஜர் கிளப் போட்டியில் இலங்கை ராணுவ ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சார்பாக விளையாடிய பெரேரா, புளூம்ஃபீல்ட் கிரிக்கெட் அண்ட் அத்லெடிக் கிளப் அணிக்கு எதிராக 13 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திசாரா பெரேரா அறிவித்துள்ளார். ஏழு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ள பெரேரா, 2014 டி20 உலகக் கோப்பையை இலங்கை அணி வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். இலங்கை ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாகவும் அவர் இருந்துள்ளார்.

Back to top button