10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிய திருப்பம் – மாணவர்கள் உற்சாகம்

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டதுடன், ஒரு சில தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அரையாண்டு, காலாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில்,  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.  காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மொத்தம்  9.45 லட்சம் மாணவ, மாணவியரின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்த பொதுத்தேர்வில் 9,39,829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் 4,71,759, மாணவிகள் 4,68,070 தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் 6,235 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 5,248 பேர் தவிர்க்கப்பட்டது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தமுறை போட்டி இல்லாததால் எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவிகளை விட மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 17 முதல் 21 வரை அவரவர் படித்த பள்ளிகளில் நேரில் சென்று வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, மற்றும் www,dge2.tn.nic.in வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மதிப்பெண் சார்ந்த குறைகள் இருப்பின் வரும் 17 முதல் 25 ஆம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில்,  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 5, 248 பேர் தவிர்க்கப்பட்டது ஏன் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. 9,45,77 பேர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி இருந்த நிலையில், 231 பேர் பொதுத் தேர்வு எழுத பதிவு செய்த பின் இயற்கை எய்தி விட்டதாகவும், 658 பேர் மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளியை விட்டுச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 4,359 மாணவர்கள், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் எழுதவில்லை என்றும், பள்ளிகளுக்கு முழுமையாக வருகை புரியவில்லை எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Back to top button