‘குக்கர்’ சின்னத்துக்கு வாக்குசேகரித்த வேட்பாளரை விரட்டி அடித்த பொதுமக்கள்… காரணம் என்ன?

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே வாக்கு சேகரித்துக்கொண்டிருந்த வேட்பாளர் ராஜவர்மனை பொதுமக்கள் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், சாத்தூர் தொகுதி அமுமுக வேட்பாளராக எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று ஆசிலாபுரம்,முறம்பு சத்திரப்பட்டி ,உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் குக்கர் சின்னத்தில் வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின் வேலாயுதம் பகுதிக்கு சென்ற அவர், வீடு வீடாக சென்றபடி ஓட்டுக்கேட்டார்.

அப்போது அங்கு கூடிய பொதுமக்கள், கடந்த முறை இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு வந்து வாக்குறுதி கொடுத்தும் எதுவும் செய்யாதது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் தொகுதிக்கு எந்த நலத்திட்டத்தையும் செய்யாமல் மீண்டும் ஓட்டுக்கேட்டு இந்த பகுதிக்கு வந்துள்ளீர்களே, உங்களை நம்பி எப்படி வாக்களிப்பது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். அதன்பின் பேசிய வேட்பாளர் ராஜவர்மன், தனக்கு எதிராக யாரோ சதி திட்டம் தீட்டி மக்களை தனக்கு எதிராக திசை திருப்பியுள்ளதாக ஆவேசத்தில் கூறிச்சென்றார்.