சென்னை அதிகாலையில் கொட்டித்தீர்த்த கனமழை…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. வெப்ப சலனம் காரணமாக கடந்த இரு தினங்களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையில் வெயிலுக்கு இதமாக மழை பெய்ய வாய்ப்பிருக்கா என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

மேலும் ஆங்காங்கு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் இன்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் தேங்கின.

குறிப்பாக திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி-நகர், கிண்டி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை வாசிகள் தற்போது பெய்த மழையால் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Back to top button