கொரோனா எதிரொலி: ஏப்.10 முதல் அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள்…

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்ததை அடுத்து, அரசு தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற சனிக்கிழமையிலிருந்து பின்பற்றப்படுகிறது.

இந்தியாவின் வடமாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரொனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில், தேர்தல ஒட்டி, பெரும்பாலானோர் பிரச்சார கூட்டங்களில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் அரசியல் கட்சித்தலைவர்கள் பலர் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் தொற்று எண்ணிக்கையும் மளமளவென்று உயர்ந்தது. இதனால் விரைவில் ஊரடங்கு அறிவிக்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்தநிலையில், வருகிற 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகளின் விவரம் வருமாறு:

* தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப். 10 முதல் தடை.

* திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

* தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.

* இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

* பொழுது போக்கு பூங்கா, வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி.

* கல்வி, சமுதாய, பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகளில், உள் அரங்குகளில் 200 நபருக்கு மட்டும் அனுமதி.

* வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்.

* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி

* சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு.

* மாவட்டங்களில் உள்ள சில்லறை வியாபார கடைகள் மற்றும் சிறிய காய்கறி சந்தைகளுக்கும் தடைவிதிப்பு.

* பேருந்து இருக்கைகளில் அமர்ந்து செல்ல மட்டுமே பயணிகளுக்கு அனுமதி.

* உணவகங்கள் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.