தமிழகத்தில் 21 ஆயிரத்தை தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 144 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு இன்று 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 21 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 49 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 230 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 144 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 612 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 6 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Back to top button