திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு.க. ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு.க. ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருகிற 7ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் திமு.க. சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இரவு 7 மணிக்கு நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துரைமுருகன் பொன்முடி உட்பட புதியதாக வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னித்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் ஈஸ்வரன் உட்பட மொத்தம் 133 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை வாழ்த்தி முன்னிணி தலைவர்கள் உரையாற்றினர். இதன் பிறகு திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்களால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை நாளை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். வரும், 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளில் தலைமை செயலக அதிகாரிகள் மற்றும் ஆளுனர் மாளிகை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Back to top button