காலியான பதவிகளை புதிய அரசு நிரப்பினால் இமயமலை என்ன பிளந்தா விடும்? துரைமுருகன் காட்டம்…

காலியாக உள்ள பதவிகளை புதிய அரசு நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாக பிளந்து விடுமா என கேள்வி எழுப்பி உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், ஆளுநருக்கு ஏன் இந்த அவசரம் என நருக்கென கேட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே வெளியான கருத்துக்கணிப்பு படி, புதிய அரசு ஆட்சிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் ஏற்கனவே காலியாக இருந்த காந்திராம கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி ஆகியவற்றிற்கு ஆளுநர் பன்வாரி லால் திடீரென பணியாளர்களை நியமனம் செய்து அறிவித்தார்.

ஆளுநரின் இந்த அறிவிப்பு தேர்தல் மரபுக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்தும், ஏன் இந்த அவசரம் என கேள்வி எழுப்பியும் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், புதிய அரசு பல புதிய சிந்தனை திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிக தெளிவாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தேர்தல் நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட இந்த ஒரு மாத காலத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதே மரபு என்று கூறினார்.

ஆனால் பல ஆண்டுகள் நிர்வாக பொறுப்பை ஏற்க போகும் துணை வேந்தர்களின் பெயர்களை ஆளுநர் அவசர அவசரமாக வெளியிட்டிருப்பது அவருக்கு அழகல்ல என்று சாடியுள்ளார். அதுமட்டுமல்லாது, பல நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த பதவிகளை புதிய அரசு நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாக பிளந்தா விடும் என துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

முறையான துணை வேந்தர்களை நியமிக்காதததால் தான் சென்னை பல்கலைக்கழகம் சீர்கெட்டு அழிந்து நிற்பதாக தெரிவித்த அவர், முடிந்தால் ஆளுநரின் செயலாளர்கள் ஆளுநருக்கு தகவலை எடுத்து செல்லுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.