தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை…தமிழக அரசு விளக்கம்!!

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அரசின் அனுமதி பெறாமல் தமிழகத்தில் இருந்து ரெம்டிசிவர் மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் வெளி மாநிலங்களுக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்காக எடுத்தது.

தமிழகத்தில் இருந்து ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, இது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. பிற்பகலில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு 250 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படுவதாகவும் கூறியுள்ள தமிழக அரசு, 65 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு வழங்கியதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டிவிசர் மருந்து கையிருப்பு இல்லை என்றால் அரசிடம் பணம் செலுத்தி பெற்று கொள்ளலாம் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.இதனை கேட்டு கொண்ட நீதிபதிகள் தமிழகத்தில் ரெம்டிவிசர், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் மற்றும் தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

அவசர காலங்களில் துரிதமாக முடிவெடுக்க சுதந்திரமான சிறப்பு அதிகாரி குழுவை நியமிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.மேலும் தடுப்பு மருந்துகளின் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணை ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Back to top button