மனைவி பிரிந்த துயரம்.. தற்கொலைக்கு முயன்ற இளைஞர்…மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு கத்திக்குத்து…

ஆண்டிப்பட்டியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞரை, கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள நாச்சியார்புரத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞர், அதே பகுதியினைச் சேர்ந்த அதிமுக பிரமுகரின் மகளை கடந்த மாதம் காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து காதலர்களையும், பெற்றோரையும் அழைத்து பேசிய காவல்துறையினர், வேல்முருகனின் மனைவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இதனால் மனமுடைந்த வேல்முருகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகேயுள்ள கண்மாயில் பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வேல்முருகனை பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற அப்பெண்ணின் சகோதரன் விஜய், அறைக்குள் சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேல்முருகனை குத்திவிட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வேல்முருகனின் மனைவியின் சகோதரன் விஜய் உட்பட 9 பேரின் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் இளைஞர் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.